A Reply to Shaaji’s article about Ilayaraja
Shaaji - Raaja - Me
மதிப்பிற்குரிய ஷாஜி அவர்களுக்கு,
நீங்கள் எழுதிய “இளையராஜா: நேற்றும் இன்றும்” என்ற கட்டுரையைப் படிக்க நேர்ந்தது.
“இப்பொழுதெல்லாம் இளையராஜாவைத் தாக்கி எழுதப்படும் கட்டுரைகளுக்கு அமோக வரவேற்பு கிடைக்கிறது” என்றே நினைக்க வைக்கிறது உங்கள் கட்டுரை. இளையராஜா பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை என்பது ஊரறிந்த விஷயம். “அவர் அதிகம் அமைதியை விரும்புபவர்” என்று கமல்ஹாசன் ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டு இருந்தார். அது உண்மை தான் என்பது இப்பொழுது எனக்குத் தெளிவாகிறது. சமீப காலமாக அவர் மேடைப் பேச்சுக்கள் எல்லாமே சர்ச்சைக்குக் கொண்டு வரப்பட்டன. அவர் பேசாமல் ஒதுங்கி இருந்தாலும் அவரை விட்டுவைப்பதில்லை சில பேர். அவர் மேடைப் பேச்சாளர் அல்ல. ஒரு மேடையில் பேசுவதென்பது மிகவும் கடினமான விஷயம். அதுவும் ஒருவரைப் பற்றி புகழ்ந்து பேசும் மேடையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் சொதப்பினாலும் அவ்வளவுதான். (இளையாராஜா இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது!).
“What you don’t see with your eyes, don’t witness with your mouth.”
என்ற பழமொழி தான் என் ஞாபகத்துக்கு வருகிறது. அப்படிப் பார்த்தால் சரித்திர நிகழ்வுகள் எதையுமே நாம் நம்பக்கூடாது என்கிற பொருள்படுமோ? எனக்குத் தெரியவில்லை. நானும் பல விஷயங்களை(செய்திகளை) நண்பர்கள் மூலமாக தெரிந்து கொண்டு இருக்கிறேன். அவற்றில் எவை எவை உண்மை என்பது பற்றிய ஐயம் என்னுள் எழுகிறது! அந்தச் செய்திகளை நான் என்னுடைய நண்பர்கள் பல பேரிடம் பகிர்ந்திருக்கின்றேன். நாளை என் நிலைமை என்னவோ? இளையராஜாவைப் போல் நானும் கடுமையாக விமர்சிக்கப்படுவேனோ? கண்டிப்பாக கிடையாது. நான் ஒரு கலைஞன் இல்லையே! சினிமாத் துறையில் பணிபுரியவில்லயே! அதுவும் இல்லாது நான் என்னுடைய நண்பர்களுடன் மட்டுமே அந்த விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன்.(எதிரிகளுடன் அல்லவே!). இளையராஜா கேள்வி ஞானத்தின் வழியாக(யாரோ ஒரு நண்பர் சொல்லக் கேட்டு) அந்த சம்பவத்தைக் கூறி இருப்பார் என்பது எனது தாழ்மையான கருத்து!
பழசிராஜா நிகழ்ச்சியில் இளையராஜாவின் கருத்து வெவ்வேறு விதமாக திரிக்கப்பட்டு விட்டது என்பது தான் உண்மை. இளையராஜாவின் பேச்சிலிருந்த உண்மையை, நேர்மையை யாரும் புரிந்து கொள்ளவில்லை.
அவர் பழசிராஜா படத்தை மிகவும் ரசித்து இசை அமைத்து உள்ளார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது! அந்தப் படத்தின் மேல் அவர் வைத்திருந்த ஈடுபாடும் ஆர்வமும் தான் அவரை இப்படிப் பேச வைத்திருக்கின்றது! தும்பி வா போன்ற பல அற்புதமான பாடல்களைத் தந்தவரிடம்(ஓ என் வி குரூப்) இளையராஜா இன்னமும் எதிர்பார்த்திருக்கின்றார் என்பதே அவர் பேச்சின் உண்மைப் பொருள். இளையராஜா தன்னுடைய விருப்பம் போல் (அவர் நினைத்தாற் போல் ஒரு பாடல்) அமையவில்லை என்பதைத் தான் மேடையில் கூறினார்.(பாடல்கள் தோல்வி அடைந்ததற்கு காரணம் ஓ என் வி குரூப் என்றும் அவர் குறிப்பிடவே இல்லை). பாடல்கள் தோல்வி அடைந்தது என்று இளையராஜா எங்கே குறிப்பிட்டு இருந்தார்?
கமல்ஹாசன் சொன்ன ஒரு சம்பவம் என் நினைவுக்கு வருகின்றது.அபூர்வ சகோதரர்களில் இடம்பெற்ற “உன்னை நெனச்சேன்” மெட்டுக்குப் பல பாடல்களை எழுதிக் கொடுத்தாராம் வாலி. எந்த ஒரு பாடல் வரிகளும் கமலைக் கவரவில்லையாம். “இது தான்யா கடைசி. இதுக்கு மேல கேட்டீனா? இந்தா வெச்சிக்கோ!” என்று கோபத்துடன் வாலி கொடுத்த அந்த வரிகள் தான் “உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன்”. ஒரு நல்ல நட்போ மரியாதையோ இருவருக்கும் இடையே இருந்தால் மட்டுமே இந்தக் கோபம் சாத்தியம்.
இதே மாதிரியான ஒரு கோபம்(ஆதங்கம்) தான் பழசிராஜா விழாவில் இளையராஜாவால் வெளிப்படுத்தப்பட்டது. ஆனால் அது எல்லோராலும் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டது.(சித்தரிக்கப்பட்டது).
“ஊர்ல முதல்ல சத்தமாப் பேசுறவங்க பேச்சு தான் நியாயமாப் போகுது.அதுல சில சமயம் நெசம் செத்துப் போவுது”
- இந்த வசனம் உண்மைதான். சத்தமாகப் பேசுறவங்க வேற யாருமில்லை உங்களை மாதிரி எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் தான். “சத்தமாகப் பேசுறவங்க” – இதைத் தப்பாக அர்த்தம் பண்ணிக்காதீங்க. எல்லா மக்களுக்கும் கேக்குற மாதிரி பேசுறவங்க(சத்தமா) தான் எழுத்தாளர்களும் பேச்சாளர்களும். அவர்கள் உண்மையைக் கூறினாலும் திரித்துக் கூறினாலும் மக்கள் அதை நம்புவார்கள். கூடுமான வரை உங்கள் சொந்த வெறுப்புகளை(அது யாராக வேணும்னாலும் இருக்கட்டும்) மக்கள் மேல் திணிக்காதீர்கள்!
“தும்பி வா பாடல் கேனடாவின் பாப் இசைக்குழுவான The Four Lads 1953ல் வெளியிட்ட Istanbul, Not Constantinople எனும் பாடலின் நகல் என்றதொரு விமர்சனம் இப்போது இணையப்பக்கங்களில் வலம்வருகிறது”
என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இந்த மாதிரி செய்திகளை நீங்கள் உங்கள் கட்டுரையில் சொல்வதற்கு முன்பு நன்கு ஆராய்ந்து அதன் உண்மையை அறிந்து கொள்வது அவசியம். இது உங்கள் கடமையும் கூட(நல்ல எழுத்தாளரின் அடையாளமும் அங்கமும்) .
“Rumors can travel faster than light”
என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.இப்பொழுதுதான் அது உண்மையென உணர்கிறேன். எனக்குத் தெரிந்தவரை நீங்கள் மேற்சொன்ன தகவலை ஒருவன்(ர்) மட்டுமே ஒரு இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளான். (அதுவும் ஒரு கருத்தாக). நீங்கள் குறிப்பிட்டுள்ள பாடலுக்கும் தும்பி வா பாடலுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை.
“Puttin’ on the Ritz” என்கிற பாப் பாடலை நீங்கள் கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.அந்தப் பாடலை நினைவூட்டுகிறது “Istanbul, Not Constantinople” பாடல். Irving Berlin 1929-இல் எழுதிய பாடல் தான் “Puttin’ on the Ritz” . புதிய முகம் படத்தில் இடம்பெற்ற “ஜூலை மாதம் வந்தால்” பாடல் இந்தப் பாடலின் தழுவல் தான் என்று பல பேர் வாதாடியதெல்லாம் நான் கவனித்து இருக்கிறேன். சந்தேகத்திற்கு வித்திட்ட அனைத்துப் பாடல்களையும் இங்கு இணைத்துள்ளேன். முடிவு உங்கள் கையில்!
முதல் பாடல் இங்கே – (Istanbul – The Four Lads) – Released in 1953
இரண்டாவது பாடல் இதோ – (Fred Astaire – Puttin’ On The Ritz) – 1946
மூன்றாவது பாடல் இங்கே – “July Maadham Vandhaal – A.R.Rahman” – 1993
நான்காவது பாடல் – “Ilaiyaraaja’s Instrumental Version of Thumbi Vaa“
“மொஸார்ட், பாக், பீத்தோவான் மூவருமே தனது குருமார்கள் என்று இளையராஜா கூறியதாக அறியநேர்ந்தது. ஐரோப்பாவில் அவர்கள் வாழ்ந்த இடங்களை எல்லாம் ஒரு புனிதப்பயணம் மேற்கொள்வதுபோல சென்று வந்திருக்கிறார். ஆனால் அவர்களின் மனித இயல்பை இளையராஜா உணர்ந்துகொண்டாரா என்று தெரியவில்லை? மொஸார்ட் தன்னை எப்போதாவது “நேற்று இல்லை நாளை இல்லை, எப்பவும் நான் ராஜா” என்று கருதிக் கொண்டிருந்தாரா என்றும் தெரியவில்லை.”
இந்த வரிகள் தான் நீங்கள் எழுதிய இந்தக் கட்டுரையிலேயே என்னை மிகவும் கவர்ந்தது. மொஸார்ட், பாக், பீத்தோவான் போன்றவர்களின் மனித இயல்பை நீங்கள் தான் விளக்கிக் கூற வேண்டும் மக்களுக்கு. இந்த மூவரின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு(என்னைப் போல் பெரும்பாலானோர்க்கு) இன்னும் அமையவில்லை.(”Amadeus” படம் மட்டும் பார்த்து இருக்கின்றேன்.Wikipedia-வில் அவர்களைப் பற்றி படித்திருக்கின்றேன்).
“Perfect objectivity is always impossible, no matter who writes a person’s biography.Personally i don’t believe much in biographies”. எனினும் உங்களிடம் இருந்து மொஸார்ட், பாக், பீத்தோவான் போன்றவர்களின் மனித இயல்பைப் பற்றிக் கேட்டு அறிய ஆசைப்படுகிறேன்.
ஒரு சபை என்று வரும்போது ரசிகன் என்பவன் தான் நேசித்த மனிதனின்(பிடித்தமான கலைஞன்) படைப்புகளைக் குறை கூற விரும்புவதில்லை! இந்தப் போக்கை நீங்கள் இந்த உலகத்தின் எந்த இடத்திலும் பார்க்கலாம். இந்த விவகாரத்தில் எனக்குத் தெரிந்தவரை இளையராஜாவின் ரசிகர்கள் மிகவும் வெளிப்படையாகவே அவரது பாடல்களை விமர்சனம் செய்கின்றனர். இந்தப் போக்கை நீங்கள் ஆர்க்குட் இணையதளத்தில் பார்க்கலாம். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதால் பழசி ராஜாவின் இசை நன்றாக இல்லை என்று ரசிகர்களும் மக்களும் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது மிகவும் தவறான எண்ணம்.
You should love an artist before trying to criticize his works. ஓர் ரசிகனின் பார்வையில் தெரிவது கூட பல சமயம் ஓர் விமர்சகனின் பார்வைக்குத் தெரியாமல் போகிறது! If you hate a person, don’t criticize his works. Better write a biography for that person.
ஒரு பாடல் நன்றாக இல்லை என்பதை பல்வகை மக்கள் எப்படிச் சொல்லுகிறார்கள்(விமர்சிக்கிறார்கள்)? என்பதைக் கவனியுங்கள்.
இளையராஜாவின் ரசிகன் : மச்சான் இந்தப் பாட்டு சுமாராக இருக்குல..எவ்வளவோ எதிர்பார்த்தேன்! (அ) பாட்டு நல்லா இருக்கு. ஆனா ?……
விமர்சகன் 1 (இளையராஜாவின் படைப்புகளைக் கொஞ்சமாவது நேசிப்பவர்) – இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள எந்தவொரு பாடலும் இளையராஜாவின் தரத்தைத் தொட்டவாறு இல்லை.ரசிகர்களுக்கு இது ஏமாற்றாமாகத்தான் அமையும் என்று எண்ணுகிறேன்.
விமர்சகன் 2 (இளையராஜாவைச் சற்றும் பிடிக்காதவர்) – இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள எந்தவொரு பாடலும் உலகத் தரத்திற்கு இல்லை. அவரின் ரசிகர்கள் இதனை ஒரு போதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
“உப்கார் (Upkaar) எனும் இந்திப் படத்தில் வந்த கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்த ‘கஸ்மே வாதே பியார் வஃபா’ எனும் பாடலின் நேரடியான நகலாக ‘கனவு காணும் வாழ்க்கை யாவும்’ (நீங்கள் கேட்டவை) என்ற பாடல் வந்தது எப்படி?” – இதற்கான பதில் பலரும் அறிந்ததே.கல்யாண்ஜி ஆனந்த்ஜி இசையமைத்த “நிலே நிலே அம்பர் பர்”(Neele Neele Ambar Par) என்ற ஹிந்திப் பாடலைக் கேட்டு இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். அந்தப் பாடல் இளையராஜாவின் “இளைய நிலா பொழிகிறது” பாடலின் நகல்(தழுவல்) தான். அதற்குப் பதிலாக இளையராஜா கல்யாண்ஜி அவர்களிடம் பெற்றுக்கொண்ட பாடல் தான் ‘கஸ்மே வாதே பியார் வஃபா’ . இந்தத் தகவலை SPB அவர்கள் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நேயர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
“இதைப் படித்தாலே பல இளையராஜா ரசிகர்களுக்கு எரிச்சலும் கோபமும் வரும்.ஏன் என்றால் அவர்களைப் பொறுத்தவரை இளையராஜா ஒரு கடவுள்.” என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நானும் ஓர் இளையராஜா ரசிகன் தான். எனக்குக் கடவுள் நம்பிக்கையும் கிடையாது. உங்கள் கட்டுரையைப் படிக்கும்போது எனக்குக் கோபம் வரவில்லை. மாறாக சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் நியாயமான சில விஷயங்களை மக்கள் முன் கொண்டு சேர்ப்பது என் கடமையாகக் கருதுகிறேன். அதற்கான முயற்சி தான் இந்தப் பதிவு. இன்னும் எவ்வளவோ இங்கு கொட்டவேண்டும் என்று எண்ணினேன். எனக்கு அதை எல்லாம் எப்படி இந்தக் கடிதத்தில் கோர்ப்பது என்ற ஒரு சிந்தனை இல்லை.(நான் எழுத்தாளன் இல்லையே).
குறிப்பு : ஏதேனும் எழுத்துப் பிழையோ தொடர்ச்சியான நிலை இல்லாமல் இருந்தாலோ தயவு செய்து என்னை மன்னிக்கவும்.
இப்படிக்கு,
????????
Post your comments here : For Comments
